பினாங்கு மாநில 2-வது துணை முதல் அமைச்சர் பி.இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீதில் விசாரணை மேற்கொள்ளும் போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவுள்ளதாக இன்று உறுதியளித்தார். இராமசாமி மீதான விசாரணை அறிக்கையைத் திறந்து விட்டதாக போலிஸ் தலைவர் மொஹமட் ஃபுஸி ஹருன் கூறியதைத் தொடர்ந்து, அவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்தார். இருப்பினும், தன் மீது குற்றஞ்சாட்டி, அவதூறு பரப்பும் தரப்பினரையும் விசாரிக்க வேண்டுமென அவர் போலீசாரை வலியுறுத்தினார். “நான் போலிசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன்னர், போலிஸ் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். “என் மீது அவதூறு பரப்பிக் கொண்டிருக்கும் தரப்பினர் பற்றியத் தகவல்கள் வந்துள்ளன, காவல்துறையினர் அவர்கள் மீதும் விசாரணை அறிக்கையைத் திறக்க வேண்டும். “எப்படியாயினும் நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன், ஜாகிர் நாயக் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, என் மீது அவதூறுகளும் தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன,” என்று அவர் கூறினார்....