இந்தியாவிற்கான விசா கட்டணம் குறையவில்லை; வதந்திகளை நம்பாதீர்
கோலாலம்பூர், டிச. 26
இந்தியாவிற்கான விசா கட்டணம் மீண்டும் பழைய நடைமுறைக்கு திரும்பிவிட்டதாக சமூக தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. ஆனால் இந்த செய்தியில் துளி அளவும் உண்மை இல்லை என்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது.
பிரதமர் மோடி மலேசியர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் 189 வெள்ளிக்கு மாற்றி விட்டதாகக் கூறினார் என்ற செய்தி சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. அதோடு மலேசிய இந்தியர்களின் நலனில் அக்கறைகொண்டு நம்பிக்கை கூட்டணி அரசு வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது எனவும் சிலர் தங்களின் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கான விசா கட்டணம் குறைந்துவிட்டது என தமது முகநூலில் ஒருவர் வெளியிட்ட செய்தியை பலர் பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவும் வேளையில் அந்த செய்தியில் துளி அளவும் உண்மையில்லை என மலேசியாவுக்கான இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்தியாவிற்கான விசா கட்டணம் குறைந்துவிட்டது என்ற செய்தியை அறிந்து சிரம்பானில் விசாவிற்கு விண்ணப்பம் செய்யச் சென்ற ஒரு குடும்பத்தினர் விசா கட்டண முறையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக தளங்களில் வெளிவந்த செய்தியை நம்பி தாங்கள் இந்தியாவிற்கான விசா கட்டணத்திற்கு விண்ணப்பம் செய்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு செய்தி வெளி வரும்போது உடனே அதை நம்பி பகிர்வதை நிறுத்திவிட்டு அந்த செய்தியில் உண்மை உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இதனிடையே 2017 ஆம் ஆண்டு மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இந்தியாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டபோது இந்தியாவிற்கான விசா கட்டணம் உயர்த்தப்பட்டது. இது நாட்டில் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இந்த விவகாரத்திற்கு மஇகா கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் ஒரே நாளில் தீர்வு கண்டார். அப்போது அவரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து விசா கட்டணம் மீண்டும் பழைய நிலைக்கு குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி கேபி சாமி ஒரு வீடியோ பதிவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ பதிவு மீண்டும் சமூகத்தளங்களில் இப்போது வைரல் ஆகி விசா கட்டணம் குறைந்துவிட்டது என ஒரு தரப்பினர் தொடர்ந்து பொய்ச் செய்தியை பரப்பி வருகிறார்கள்.
விசா கட்டணம் குறையவில்லை அதில்தான் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு மீண்டும் பேரதிர்ச்சியாக இருக்கின்றது. அண்மையில் இந்தியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட மனிதவள அமைச்சர் குலசேகரன் 14 நாட்களுக்கு இலவச விசா வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக கூறினார்.
அடுத்த ஆண்டு இதற்கான அதிகாரத்துவ தகவல் வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள் இத்தருணத்தில் பொய்யான செய்திகளைப் பரப்பி மக்களைக் குழப்பும் நடவடிக்கையை மேற்கொள்ளும் சில தரப்பினர் உடனடியாக அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சமூக தளங்களில் கருத்து பரிமாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றது.
மலேசியர்களுக்கான இந்தியா விசா வெ. 462.56 காசாக உள்ளது. இதில் சேவை வரியும் அடங்கியுள்ளது. ஓராண்டு காலத்திற்கு இந்த விசாவை பயன்படுத்தலாம். இவிசா எனப்படும் மின்னியல் விசாவிற்கு 320 வெள்ளியாகும். இந்த விசாவை 4 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
Comments
Post a Comment