கோயில்களில் இனி தமிழில் தான் வழிபாடு - தமிழர் களம் மலேசியா அறைகூவல்!!!

நேற்று 16.06.2018 பத்துமலைத் திருத்தலத்தில், தமிழர் களம் மலேசியாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற, ‘தமிழ் வழிபாடே தமிழர் வழி’ என்ற நிகழ்ச்சியில், இந்துக்கள் என்பவர்கள் யார் ? தமிழர்கள் இந்துக்களா ? தமிழர்களின் சமயம் இந்து சமயமா ? 
என்ற கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தலைவர் திருமுறைச் செம்மல் ஐயா ந.தர்மலிங்கம் அவர்கள் சிறப்பான தெளிவுரையை வழங்கினார்.

இந்து மதம் என்று உலகில் ஒரு  மதமே கிடையாது. இன்று பலரும் இந்து மதம் என்று கூறித்திரியும் மதத்திற்கு சனாதனதர்மம் என்று பெயர். இந்த சனாதனதர்மம் என்பது வேதத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆரியர்களின் வழிபாட்டு முறைகளைக் கொண்டது. இந்து மதம் என்ற குறியீடு ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது , அவர்களால் இடப்பட்டப் பெயர்.

தமிழர்களின் வழிபாட்டு மூலங்களாக இருந்த சிவனியம், திருமாலியம் ஆகிய இரண்டையும் ஆரியர்களின் வழிபாட்டு மூலங்களுடன் இணைத்து சண்மதம்(ஷன்மதம்) என்ற கோட்பாட்டை உருவாக்கினர். தமிழர்களின் மரபு வழிபாடுகளான முன்னோர் வழிபாட்டு முறைகளை, நான்கு வேதங்களின் ஒன்றான ஆரண்யகம் என்ற பகுதில் உட்புகுத்திக் கொண்டனர்.
அன்று பாமரத் தமிழர்கள் சிவனியதிற்குள் (சைவம்) மரபு வழிபாடுகளை செய்து வந்தனர். ஆனல் இன்று தமிழர்கள் தங்களின் அடிப்படையான சமய வழிபாட்டுக் கூறுகளை அறியாமல், ஆரியர்களின் சண்மதக் கொள்கைக்குள் கூணிக் குறுகி அடைபட்டுக் கிடக்கிறோம். என்று ஐயா தர்மலிங்கம் அவர்கள் மேலும் கூறினார்.

தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதையும், நாம் தமிழர்கள் நம் சமயம் தமிழர் சமயம் என்பதையும் உணர்ந்து தெளிய வேண்டும். தமிழர் சமயத்திற்கான தெளிவுகளை வழங்க , பதின்நான்கு மெய்கண்ட சாத்திரங்கள் இருக்கின்றன். மேலும் பண்ணிரண்டு திருமுறைகள் , திருக்குறள் , நாலாயிர திவ்விய பிரபந்தம், என்று எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன. கீதா உபதேசம் தமிழர்களுக்கான் நூல் அல்ல என்பதையும் அதற்கும் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தமிழர்கள் கோயில்களில் தமிழில் வழிபாடுகள் செய்யச் சொல்லிக் கேட்க வேண்டு. நாம் கேட்காததால்தான் கோயில்களில் தமிழ் வழிபாடுகள் காணாமல் போனது. இன்று பல குறைகூறல்களுக்கு ஆளாக்கப்பட்டு வரும் ஐயா 'தான் சிறி நடராசா' அவர்கள்தான் மலேசியாவிலே முதன் முதலில் கோயிலில் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி, பத்துமலைத் திருத்தலத்தில் அதனை நடைமுறைப் படுத்தினார் என்ற செய்தியையும் ஐயா தர்மலிங்கம் அவர்கள் இங்கு பகிர்ந்து கொண்டார்.

புரியாத மொழியில் மந்திரம் என்று சொல்லப்படும் சமட்கிருத பாடல்களை நம்பி கோயிலில் கைகட்டி நிற்கும் தமிழர்கள், நமது முன்னோர்களும் நமது தாத்தா பாட்டிகளும் எந்த மொழியில் வழிபாடு செய்திருப்பார்கள், செய்தார்கள் என்பதை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். வீட்டில் பிள்ளைகளுக்கு தேவாரம், திருவாசகம் என்று தமிழில் உள்ள பாடல்களைப் பாடி வழிபடும் வழக்கத்தை கற்றுத்தர வேண்டும். இறைவனோடு பேசுவதற்கு நமது மொழியான தமிழே சிறந்தது என்று உணர வேண்டும். நமது தேவைகளை இறைவனிடம் எடுத்துக் கூற இடையில் ஒருவனை வைத்து , நமக்குப் புரியாத மொழியில் இறைவனுக்கு எடுத்துச் சொல்லுமாறு கேட்டுக் கொள்வது வேடிக்கையானது என்று அவர் மேலும் இடித்துரைத்தார்.

வேள்வி அல்லது யாகம் செய்வது என்பது தமிழர்களின் சமய வழிமுறை அல்ல. அது ஆரியர்களின் வழிபாடு. எனவே தமிழர்கள் தங்களின் சமய வழிபாட்டு முறைகளை மீட்டெடுக்க வேண்டும். தமிழர்களுக்குத் தொடர்பில்லாத ஆரிய வழிவந்த விழாக்களை தவிர்த்து  விட்டு, தமிழர்களின் விழாவான பொங்கல் விழாவிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
தமிழர்கள் தங்களுக்குள் உள்ள சிறு சிறு கருத்து வேற்றுமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக்கிடப்பதை தவிர்த்து, தமிழர்கள் என்ற ஒற்றைக் கருத்தில் ஒன்றிணைந்து தமிழர்களுக்கான உரிமைகளையும் உடமைகளையும் தற்காத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று ஐயா தர்மலிங்கம் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து தமிழர் இனமீட்சியில் தமிழர் சமயமும் ஒன்றாகும். அதை மீட்டெடுக்கும் பணியை தமிழர் களம் இனி தீவிரப்படுத்தும் என தமிழர் களத்தின் தலைமைப் பொறுப்பாளர் திரு. தமிழ்ப்புகழ் குணசேகரன் கூறினார்.

இங்கு மதம் என்ற பெயரால் தமிழர்களின் உரிமைகளையும் உடமைகளையும் இழப்பதற்கு தமிழர்களே கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவது, தமிழர் இனத்திற்கு மாபெரும் கேடு விளைவிக்கும். ஆகம ஆர்மி என்ற ராணுவத்தின் தளபதியிடம் இது தொடர்பாக கேள்வி கேட்டாலே, நீங்கள் தடை செய்யப்படுவீர்கள். காரணம் பொய்யும் புரட்டும் என்றும் நேர்மையற்றதாகவே இருக்குமென தமிழ்ப்புகழ் நகைப்புடன் தெரிவித்தார்.

இதுவரை தமிழர்கள் கைகட்டி வாய்மூடி இருந்தது போதும், புரியாத மந்திரத்தில் வழிபடுவதை புறக்கணிப்போம். இனி தமிழர்கள் கோயில் அனைத்திலும் தமிழ் வழிபாடே இருக்கட்டும். யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் சமற்கிருத மந்திரம் என்று இருக்கட்டும். இனி கோயில்களில் மூல வழிபாடு தமிழ்தான். புரியாத சமற்கிருதம் இரண்டாம் நிலையில் இருப்பதே நலம். நாங்கள் வாய்ப்பு கேட்ட காலம் முடிந்துவிட்டது, இனி நாங்கள் தான் வாய்ப்பளிப்போம் என்றும் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தாது எங்கள் உரிமையில் தலையிட்டால், அந்த வாய்ப்பும் பின் இருக்காது என்று தமிழ்ப்புகழ் சூளுரைத்தார்.

தமிழர் இனமீட்சி என்பது தனிமனிதனுக்கானது அல்ல, அது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டு இப்பாரினில் பரந்து விரிந்து வாழும் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது. எனவே விழிப்படைந்து நாம் அனைவரும் நம் இனமீட்சிக்கான களப்பணியில் ஈடுபட வேண்டுமென்றும், போலிகளை புறந்தள்ளி உண்மையாகவும் நேர்மையாகவும் இனமீட்சி களப்பணி செய்யும் அனைவருக்கும் தமிழர்கள் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

TERTHAL AH? NAANGE READY DATO SERI SARAVANAN SAVAL

கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!

Marubadiyum kamalanathannukku seat ah?